Sunday, February 16, 2014

பிசினஸ் தந்திரம்

பிசினஸ் தந்திரம்
-----------------------

இளைஞன் ஒருவன் நிறைய கோழி முட்டைகளை ஒரு மூன்று சக்கர வண்டியில் வைத்து மக்கள் கூட்டம் மிகுதியாக உள்ள கடைத்தெரு வழியே சென்று கொண்டிருந்தான். ஒரு திருப்பத்தில் எதிர்

பாராதவிதமாக வண்டி கவிழ்ந்து விட்டது. முட்டைகள் அனைத்தும் உடைந்து சிதறி விட்டன. இளைஞன் அழ ஆரம்பித்து விட்டான், ''ஐயோ, என் முதலாளிக்கு என்ன பதில் சொல்வேன்? இவ்வளவு

முட்டைக்குரிய காசுக்கு நான் என்ன செய்வேன்?'' அங்கே பெரும் கூட்டம் கூடிவிட்டது. எல்லோருக்கும் அழுது கொண்டிருந்த இளைஞனைப் பார்த்து பரிதாபம் ஏற்பட்டது.

அப்போது அங்கே வந்த ஒரு பெரியவர், ''தம்பி, ஏன் அழுகிறாய்? உடைந்த முட்டைகளுக்கான காசை உன்னால் கொடுக்க முடியாது என்பதுதானே உன் வருத்தம்?'' என்று கேட்க இளைஞனும் ஆம்

என்றான். உடனே அப்பெரியவர் தன் துண்டை எடுத்தார்.'' இந்தக் கூட்டத்தில் இரக்க குணமுடையவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்,'' என்று சொல்லியபடியே அதில் தன் பையிலிருந்து எடுத்து ஒரு பத்து

ரூபாய் நோட்டைப் போட்டார்.

பின் அந்தத் துண்டுடன் அந்தக் கூட்டத்தை சுற்றி வந்தார். எல்லோரும் அதில் காசு போட்டார்கள். எல்லோர் முன்னிலையிலும் பணத்தை எண்ணினார். அதை அப்படியே இளைஞனிடம் கொடுத்துவிட்டு,''

இனியாவது கவனமாக நடந்துகொள்,'' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டார்.

கூட்டத்திலிருந்த அனைவரும் அவரை பரோபகாரி என்று வாழ்த்தினர்.

கூட்டம் கலைந்தது. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் இளைஞனிடம்,'' அவர் மட்டும் வரவில்லையென்றால் உன் கதி என்ன ஆகி இருக்கும்? என்ன நல்ல குணம் அவருக்கு? அவரை

உனக்கு முன்னரே தெரியுமா?'' என்று கேட்டார்.

அந்த இளைஞன் சொன்னான், ''அவர்தாங்க என் முதலாளி. இந்த முட்டைகளை ஏற்றி அனுப்பியவர்.''

No comments:

Post a Comment