Saturday, September 20, 2014

"நீதிக்கதை"

செல்லப் பிராணிகளை விற்பனை செய்யும் கடைக்குச் சென்றான் அந்தச் சிறுவன். பல அழகிய நாய்க்குட்டிகள் அங்கே விற்பனைக்கு இருந்தன. விலை 500 ரூபாய் என்றார் கடைக்காரர். கடையின் ஒரு மூலையில் நாய்க்குட்டி ஒன்று தனியாக இருப்பதைப் பார்த்தான் அவன்.

"இது மட்டும் ஏன் தனியாக இருக்கிறது? இது விற்பனைக்கு இல்லையா?'' என்று கேட்டான் சிறுவன்.

"இது உடற் குறைபாடுள்ள குட்டி. ஒரு கால் இல்லாமலேயே பிறந்தது. ஆகவே இது விற்பனைக்கு இல்லை'' என்றார் கடைக் காரர்.

அந்தக் குட்டியைத் தூக்கி விளையாடிய சிறுவன், தனது பையில் இருந்து 500 ரூபாயை எடுத்து நீட்டினான். "இந்தக் குட்டியை வாங்கிக் கொள்கிறேன்'' என்றான்.

"இது விற்பனைக்கு இல்லை என்று சொன்னேனே! நீ வேறு நல்ல குட்டியை வாங்கிக் கொள்ளலாமே. கால் ஊனமான இந்த நாய்க்குட்டியை ஏன் தேர்ந்தெடுத்தாய்?'' என்றார் கடைக்காரர்.

சிறுவன், தான் அணிந்திருந்த கால் சட்டையின் கீழ்ப் பகுதியைத் தூக்கிக் காட்டினான். அங்கு அவனுக்கு மரத்தாலான ஒரு கால் இருந்தது.

உடற் குறைபாடு உள்ள சிறுவன், தன்னைப் போலவே ஒரு கால் இல்லாமல் இருந்த நாய்க்குட்டியின் உணர்வுகளையும் துயரங்களையும் புரிந்து கொள்ளும் பெரிய மனம் படைத்திருந்தான் என்பதே இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்.

நீதி:- மற்றவரது இடத்தில் நம்மை வைத்து, அவர்களது பிரச்னைகளையும் துன்பங்களையும் புரிந்து கொள்ளும் மனமும் திறனும் நமக்கு வேண்டும்


Thursday, September 18, 2014

இந்தியன்டா ...

ஜப்பானில் ஒருத்தன் சோப்புத் தூள் கம்பெனி வச்சிருந்தான்.

அங்கு சோப்புத் தூள் அதுவாவே பாக்கட்டில் நிரம்பி அதுவே பேக் பண்ணிக்கும்.அதில் ஒரு சின்ன தப்பு வந்தது. சில பாக்கட்டுகளில் தூள் நிரம்பாமலேயே பேக் ஆச்சு

.இதை தடுக்க அமெரிக்காவில் இருந்து ஒரு ஸ்கேன் மெசின் ஏழாயிரம் டாலர் கொடுத்து வாங்கினான்.

. அது துல்லியமா சோப்புத் தூள் இல்லாத பாக்கட்டுகளைக் காமிச்சது.

அவனும் அவைகளை ஈசியா ஒதுக்கினான்.

அதே போல் இந்தியாவில் ஒரு சோப்புத் தூள் கம்பெனியிலும் ஆச்சு. அவன் என்ன பண்ணி இருப்பான்?

எழுநூறு ரூபாய்க்குஒரு FAN வாங்கி நடுவில் ஓட விட்டான்.

சோப்புத் தூள் இல்லாத பாக்கட்டுகள் காற்றில் பறந்துடுச்சு.

இந்தியன்டா ...

துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. மூன்று பேர் வந்திருந்தனர்.

முதல் நபர் உள்ளே அழைக்கப்பட்டார். அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு ஆள் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி.

முதல் நபர் சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்...''அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒருகண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு, அடுத்த நபரை அழைத்தார்.அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார் அந்த நபர். அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.


மூன்றாவது நபர் வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!'' என்றார்.அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப்புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும்பழக்கம் உள்ளவன்தான்!''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார் அதிகாரி.மூன்றாவது நபர் சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனாலசாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!''அதிகாரி :???????????!!!!!!!!!!!!!!

Wednesday, September 17, 2014

ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள். புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார்.

சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.


அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏறி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.

இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.
அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.

ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்றுவரப் பணித்தார்

நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது. ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான்.

புத்தர் தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.

தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்?

நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!

நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?

ஆமாம் சுவாமி!

நம் மனமும் அப்படிப்பட்டதுதான். மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது தனக்குத்தானே சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம்., அது அமைதியாகிவிடும் . அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும். It will happen. It is effortless. மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல! இயலும் செயலே! அதற்கு நம் பங்கு எதுவும் தேவை இல்லை! it is an effortless process!

via கலாநிதி தீண்டா மெழுகுகள்

Tuesday, September 16, 2014

ஒருவனில் ஆயிரம் !

சிலர், செல்ல மகள் வாழ வேண்டும் என்பதற்காக கோடி கோடியாகச் சேர்ப்பார்கள். ஆனால், அவள் யாரோ ஏழையைக் காதலித்து மணந்தாள் என்பதற்காக சல்லிக்காசு தராமல் துரத்தியடிப்பார்கள்.

அவள் கஷ்டப்படுகிறாள் என்று யாராவது சொன்னால், ''படட்டும்... போய் பிச்சை எடுக்கட்டும்'' என்று சபிப்பார்கள்.


மகளை காலடி தரையில் படாமல் வளர்க்க நினைப்பது ஓர் எண்ணம். தெருத் தெருவாகப் பிச்சைக்கு அனுப்புவது முற்றிலும் நேர்மாறான ஓர் எண்ணம். இரண்டுமே ஒரு தகப்பனுக்குள் எப்படி இருக்க முடியும்? இருக்கிறதே! இது புதிர் அல்லவா!

இந்தப் புதிரை ஓஷோ விடுவிக்கிறார்.

''நாம் ஒரு மனிதர் இல்லை. ஆயிரக்கணக்கான மனிதர்கள் நமக்குள் இருக்கிறார்கள். நமக்கும் ஆயிரம் பேர் இருக்க வேண்டும். நாமும் அநேகம்... அனந்தம்...

நமக்குள் இருக்கும் முதல் நபர் காக்க நினைக்கிறார். இரண்டாமவர் அழிக்க நினைக்கிறார். ஒருவர் காதல் செய்யும் போதே மற்றவர் கொலை செய்ய விரும்புகிறார். நம்முள் ஒருவர் பக்தியுடன் கோயிலுக்குள் நுழையும்போதே, இன்னொருவர்... 'இதெல்லாம் பொய். கடவுள் என்று எவரும் இருக்க முடியாது' என்று முணுமுணுக்கிறார். நம்மில் ஒரு பகுதி கோயில் மணி அடிக்கிறது. மறுபகுதி... 'ம்... இது வெறும் பைத்தியக்காரத்தனம்' என்று கூச்சப்படுகிறது. ஒரு பகுதி, ஜப மாலையை உருட்டிக் கொண்டே விஸ்தாரமாகக் கடை நடத்துகிறது!''

- ஓஷோவின் இந்தப் படப்பிடிப்பு, எத்தனை உண்மையானது.

கவனம் சிதறிய மனம் உடையவர்களாக நாம் இருப்பதால்தான் துன்பம் அடைகிறோம்; உலகையும் துன்புறச் செய்கிறோம்.

நம்மில் எதிரெதிராகப் போராடிக் கொண்டிருக்கும் ஆயிரம் ஆயிரம் பேரையும் ஒருங்கிணைக்க முடிந்தால், நாம்தான் உலகமகா பலசாலி. இந்த ஒருங்கிணைப்பை நிகழ்த்தியவர்களே இந்திய யோகிகள்... புத்தர், மகாவீர், சங்கரர், ரமணர் போன்ற ஞானிகள். ஒருங்கிணைப்பின் மூலம் ஆனந்த கீதம் எழுப்பிய சாதனையாளர்கள் இவர்கள்.!

Monday, September 15, 2014

நீதிக்கதை

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”


அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.

”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!

Sunday, September 14, 2014

சுமைதாங்கி மரம்.



ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார்.காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லம் எடுத்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார்.

போகும் வழியில் அவருடைய வாகனம் ரிப்பேராகி நின்றது. அதை தள்ளிக்கொண்டே பொய் மெக்கானிக் கடையில் பழுதுபார்த்து ,ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு போய் சேர்ந்தார்.முதலாளி கடுமையாக அவரை திட்டினார்.


மிகுந்த வேதணையுடன் அவர் வேலைகளை ஆரம்பித்தார்.சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம் பட்டது.காயத்துக்கு துணியால் கட்டு போடுகொண்டு மீண்டும் வேலையை தொடர ஆரம்பித்தார்.சிறிது நேரம் கழித்து அவருடைய உளி உடைந்து விட்டது.

என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி இல்லையே என்று முனுமுனுத்துக்கொண்டே மீதி வேலைகளையும் முடித்தார்.முதலாளியிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார்.

வண்டியை கிளப்ப தயாரானார் ஆனால் வண்டி கிளம்ப மறுத்து விட்டது.இருட்டி போய் விட்டது இனி உன் வண்டியை ரிப்பேர் பண்ணி எப்படி எடுத்து போவாய், வா என் வண்டியில் உன்னை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன் என்று சொன்னதும் முதலாளியுடன் கிளம்பினார். போகும்வழியில் பாவம்யா நீ காலையில் இருந்து உனக்கு சோதனையாகவே நடந்துகிட்டு இருக்கு என்று ஆறுதல் சொல்லிக்கொண்டே கூட்டிகிட்டு
போனார்.

தச்சர் வீடு வந்ததும் யோவ்! தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வாயா என்று முதலாளி சொன்னார்.வீட்டுக்குள்ள வாங்க முதலாளி என்று அவரை உள்ளே அழைத்தார்,முதலாளியும் அவர் பின்னாடியே சென்றார்.தச்சர் வீட்டு வாசலில் இருக்கும் மரத்தின் மீது சிறிது நேரம் கை வைத்திருந்துவிட்டு உள்ளே சென்றார்.முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை.

தச்சர் உள்ளே நுழைந்தவுடன் அவருடைய குழந்தை ஓடி வந்தது,குழந்தையை பார்த்தவுடன் தூக்கி அனைத்து முத்தம் கொடுத்தார்.தன் மனைவியை பார்த்ததும் புன்முறுவலுடன் தன் முதலாளியை அறிமுகபடுத்திவிட்டு தண்ணீர் எடுத்து வரச் சொன்னார்.காலையில் நடந்த எந்த பிரிச்சணையையும்
நினைத்து பார்க்காமல் எப்படி இவரால் சகஜமாக இருக்கமுடிகிறது என்று முதலாளி வியந்தார்.தச்சர் எந்த வித கவலையும் இல்லாமல் குழந்தையுடன் விளையாடிகொண்டு இருந்தார்.தண்ணீர் குடித்து விட்டு முதலாளி கிளம்ப தயாரானார்.

வீட்டிற்கு வெளியே வந்தவுடன் தச்சரிடம் கேட்டார் இந்த மரத்தை தொட்டுவிட்டு போனவுடன் காலையில் நடந்த எதை பற்றியும் கவலை படாமல் எப்படி உன்னால் இருக்க முடிந்தது என்றார்.அதுவா முதலாளி இது என்னுடைய சுமைதாங்கி மரம்.

ஒவ்வொரு நாளும் நான் வேலை முடித்து வந்தவுடன் இந்த மரத்தை தொட்டு என் பாரத்தை இறக்கி வைத்துவிட்டு தான் செல்வேன்.வேலை செய்யும் இடத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடக்கும் அதை எல்லாம் வீட்டிற்குள் எடுத்துகொண்டு போக கூடாது

காலையில் வண்டி பழுதானதற்கும் நான் லேட்டாக வந்ததற்கும்,என் கையில் காயம் ஆனதற்கும்,உளி உடைந்து போனதற்கும் என் குடும்பத்தார் எப்படி பொறுப்பாக முடியும்.நான் அவர்கள் மேல் கோவப்படுவது எந்த விதத்தில் நியாயம்.

காலையில் நான் போகும்போது இந்த மரத்திடம் இருந்து என் பிரச்சனைகளை எடுத்து கொண்டு போவேன் .ஆனால் என்ன ஆச்சரியம் என்றால் நான் மாலை கொண்டு வந்து வைத்து விட்டு போன பிரச்சனைகள் அடுத்த நாள் காலை பாதி அளவு குறைந்து போய் இருக்கும்.தச்சர் சொல்வதை கேட்டு முதலாளி ஆச்சரியப்பட்டு நின்றிருந்தார்.

நண்பர்களே நீங்களும் நாளையில் இருந்து இதை கடைபிடித்து பாருங்கள்.பிரச்சனைகள் உங்களை கண்டு அஞ்சி ஓடும்...

Saturday, September 13, 2014

வெளிநாட்டுக்கு போயிட்டு வர்றவங்க.....



கையில மினரல் வாட்டரை வச்சிக்கிட்டே திரியிவாங்க… (அவங்க சுகாதாரமா இருக்காங்களாம்!)

வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்திரமா வச்சிக்கிட்டு என்ன பண்றாங்களோ?)


கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிக்கிட்டு அல்லது தள்ளிக்கிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுறதே, சர்க்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறயா?)

குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துக்கோங்க!)

கையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க… (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)

சுத்தத்தை பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)

எதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல யோசிச்சி “ஹேய்.. சாப்பாடு 2 திர்கம்ஸ்தான்!, வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்”னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க.. (ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு!)

தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு “எக்ஸ்சூஸ்மீ” ன்னு சொல்றது… (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்!!)

“செளக்கியமா”ன்னு கேக்காம.. “ஹாய்”ன்னு சொல்றது, “லட்ச”த்துக்கு பதிலா.. “மில்லியன்ல” சொல்றது, தயிருக்கு பதிலா.. “யோகர்டு”ன்னு சொல்றது, “ஹய்வே”க்கு பதிலா “ஃப்ரீவே”ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க! (இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும்!)

சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா “கோக்கோ (அ) பெப்சியோ” இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)

சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. “தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா” ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது! (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை!)

வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி… அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒன்னும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது.. (யப்பா.. பணம் டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல!)

கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு…

எதை சொல்ல வந்தாலும்.. “இப்படிதான் எங்க‌ துபாய்ல…”, ன்னு ஆரம்பிப்பாங்க!!

நன்றி : நாரத விஜயம்

Friday, September 12, 2014

நான் அடிச்சா தாங்க மாட்டே! நாலுமாசம் தூங்கமாட்டே?

கோவையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் நிகழ்ந்த சம்பவம் இது. செல்வந்தர் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் அன்னையை, கவலைக்கிடமான நிலையில் அழைத்து வந்திருந்தனர்.
தீவிர அறுவை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அம்மையாருக்கு, முக்கியமான அறுவை சிகிச்சை ஒன்றை மறுநாளே செய்ய வேண்டிய கட்டாயம். அந்த அறுவை சிகிச்சை சிக்கலானதும்கூட.
தாயார்மீது பாசம் மிக்க அந்த சகோதரர்கள், தங்கள் இஷ்ட தெய்வமாகிய முருகனை பிரார்த்தனை செய்து கொண்டே கண்ணீருடன் அறுவை சிகிக்சைக்கு அனுப்பினார்கள்.
அறுவை சிகிக்சைக் கூடத்துக்குள் ஸ்ட்ரெச்சர் நுழையும்போதே, பக்கத்தில் இருந்த யாரோ ஒருவரின் பாக்கெட்டில் இருந்த செல்ஃபோனில், ரிங்டோன் ஒலித்தது…. “சஷ்டியை நோக்க சரவண பவனார்…” என்கிற கந்த சஷ்டிக் கவசம்.
கடவுள் அருள் கிடைத்த நிம்மதி, அந்த சகோதரர்களுக்கு. அவர்கள் நினைத்தது போலவே அறுவை சிகிச்சை நன்கு நடந்து அபாய கட்டத்தை அந்த அம்மையார் தாண்டினார்.
மறுநாள், தாயாரைக் காண அந்தச் சகோதரர்களில் ஒருவர் மருத்துவமனைக்குள் நுழைந்தபோது அதே ரிங்டோன் ஒலித்தது. திரும்பிப் பார்த்தால் அதே மனிதர்!!
ஆனால் அந்த மனிதரும், அருகில் அமர்ந்திருந்த மூதாட்டியும் குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டிருந்தார்கள். இந்த இளைஞர் அருகில் சென்று விசாரித்தபோது விவரம் புரிந்தது.
நல்லாபாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி, அந்த மனிதர். அவருடைய மனைவிக்கு கணையத்தில் ஏற்பட்ட கவலைதரும் நோய்க்காக மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். கையிருந்த சிறிதளவு நிலத்தின் பேரில் கடன்வாங்கி சிகிச்சை பெற்றிருந்த நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெறவேண்டும். நாளொன்றுக்கு இருபதாயிரம்வரை ஆகும். சிகிச்சை வாரக்கணக்கிலோ மாதக் கணக்கிலோ தொடரலாம். கையில் சிறிதும் பணமில்லாமல், அவரும் அவருடைய அம்மாவும் அழுது கொண்டிருந்தார்கள்.
இளைஞர் சொன்னார், “எங்கள் அம்மா அறுவை சிகிச்சைக்கு உள்ளே போகும்போது உங்கள் செல்ஃபோனில் ஒலித்த பாடல் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. அதே போல் அவர்கள் குணமானார்கள். உங்கள் மனைவியின் சிகிச்சைக்கு எவ்வளவு இலட்சம் செலவானாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன். மனம் கலங்காமல் சிகிச்சையைத் தொடருங்கள்”.
சொன்னது போலவே சிகிச்சைக்காக ஆன சில இலட்சங்களைத் தந்ததுடன், அந்த ஏழைப்பெண் குணமானதும் தன்னுடைய காரிலேயே ஊரில் போய் விட்டுவந்தார் அந்த இளம் தொழிலதி திரு.சிவா.
நல்ல ரிங்டோன் வைப்பதில்கூட எத்தனை நன்மைகள்! இதை நண்பரிடம் சொல்லி முடித்தேன். அதுவரை வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்த அந்த நண்பரின் ரிங்டோன் அந்த நேரம் பார்த்து அலறியது… “நான் அடிச்சா தாங்க மாட்டே! நாலுமாசம் தூங்கமாட்டே?!!”

Wednesday, September 10, 2014

மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக

கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்,

"நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய்.

இதற்கு கழுதை சொன்னது

"நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்."

கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு நாய் கூறியது,

"கடவுளே, 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்"

கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார்
"நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு குரங்கு கூறியது "20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்"

கடவுளும் குரங்கின்ஆசையை நிறைவேற்றினார்.

கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார் " நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு மனிதன் கூறினான் "20 வருஷம் ரொம்ப குறைவு.

கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும், நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும், குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு"

கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்.

அன்று முதல்

மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக.

கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதை போல் எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான்.

குழந்தைகள் வளர்ந்தபிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்.

வயதாகி, Retire ஆன பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி, தன் பேரகுழந்தைகளுக்­கு வித்தைகள் காட்டி மகிழ்வித்து மரணக்கின்றான்.

Tuesday, September 9, 2014

ஏண்டா இவ்வளவு நேரம்?

கிராமத்திலிருந்து இரண்டு நண்பர்கள் பக்கத்திலிருந்த நகரத்திற்கு சென்றார்கள்.அங்கு ஒரு மதுக் கடையைப் பார்த்தவுடன் உள்ளே நுழைந்தவர்கள் தொடர்ந்து குடிக்க ஆரம்பித்தனர்.

நீண்ட நேரம் சென்றபின் ஒருவன் சொன்னான்,''டேய் மாப்பிள்ள,கடைசி பேருந்தைப் பிடித்தாவது ஊருக்குப் போக வேண்டுமே,''என்றான்.உடனே இருவரும் பேருந்து நிலையம் சென்றனர்.அப்போது கடைசிப் பேருந்து போய்விட்டிருந்தது. என்ன செய்வது என்று இருவரும் யோசிக்க ஆரம்பித்தனர்.

உற்சாகமாக ஒருவன் கத்தினான், ''பக்கத்தில்தானே பேருந்து டெப்போ இருக்கிறது! ஏதாவது ஒரு பஸ்ஸை வெளியே எடுத்து நாமே ஓட்டிக் கொண்டு நம் ஊருக்குப் போனால் என்ன?''என்று கேட்க முழு போதையில் இருந்த அடுத்தவன்,''நானே சென்று பேருந்தை எடுத்து வருகிறேன்,''என்று கூறி உள்ளே சென்றான். நீண்ட நேரம் ஆகியும் அவன் வெளியே வரவில்லை. திடீரென பல பேருந்துகளை இடித்துக் கொண்டும் சேதப்படுத்திக் கொண்டும் ஒரு பேருந்து வெளி வந்தது. அதை அவன் ஓட்டிக் கொண்டு வந்தான்.

''ஏண்டா இவ்வளவு நேரம்?''என்று இவன் கேட்க அவன் சொன்னான்,''என்ன செய்வது? நம்ம ஊருக்குப் போற பேருந்தைக் கடைசியில் நிறுத்தி வச்சிருந்தாங்க.அதைத் தேடி எடுத்து வர தாமதமாயிருச்சி,''

Monday, September 8, 2014

நன்மைக்கு அருகில் இருப்பவர்களுக்குத் தான் அதிக மரியாதை கிடைக்கும்...!

ஒரு விவசாயி குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான். குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்கள். ஒரு நாள் அந்த குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால் அந்த விவசாயி குதிரைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான். மருத்துவர் அந்த குதிரையின் நிலையை பார்த்து, நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தை சாப்பிட்டு குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனை கொன்றுவிட வேண்டியது தான் என்று சொல்லி, அன்றைய மருந்தை கொடுத்துச் சென்றார்.

இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. மறுநாள், அந்த மருத்துவர் வந்து அன்றைய மருந்தைக் கொடுத்து சென்றார். பின் அங்கிருந்த ஆடு, அந்த குதிரையிடம் வந்து, "எழுந்து நட நண்பா, இல்லாவிட்டால் அவர்கள் உன்னை கொன்று விடுவார்கள்" என்று அந்த குதிரையை ஊக்குவித்தது.

மூன்றாம் நாளும் வந்துவிட்டது, மருத்துவரும் வந்து குதிரைக்கு மருந்து கொடுத்துவிட்டு, அந்த விவசாயிடம் "நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனை கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கு பரவிவிடும்." என்று சொல்லிச் சென்றார்.

அந்த மருத்துவர் போனதும், ஆடு குதிரையிடம் வந்து, நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். உன்னால் முடியும், எழுந்திரு! எழுந்திரு! என்று சொல்லியது. அந்த குதிரையும் முயற்சி செய்து எழுந்து நடந்துவிட்டது.

எதிர்பாராதவிதமாக அந்த குதிரையை விவசாயி பார்க்க வரும் போது, குதிரை ஓடியதைப் பார்த்து சந்தோஷமடைந்து, மருத்துவரை அழைத்து அவரிடம் "என்ன ஒரு ஆச்சரியம். என் குதிரை குணமடைந்துவிட்டது. இதற்கு நிச்சயம் உங்களுக்கு ஒரு விருந்து வைக்க வேண்டும். சரி, இந்த ஆட்டை வெட்டுவோமா!!!" என்று சொன்னார்"


"பார்த்தீர்களா! இந்த கதையில் உண்மையில் குதிரை குணமடைந்ததற்கு அந்த ஆடு தான் காரணம். ஆனால் மருத்துவரின் மருந்தால் தான் குதிரை குணமடைந்தது என்று எண்ணி

, கடைசியில் அந்த ஆட்டையே பலி கொடுக்க நினைக்கிறார்கள்.

இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்ததோ, அவர்களை விட, அந்த நன்மைக்கு அருகில் இருப்பவர்களுக்குத் தான் அதிக மரியாதை கிடைக்கும்...

Sunday, September 7, 2014

படித்ததில் பிடித்தது..

ஆற்றங்கரை ஓரமாக வந்துகொண்டிருந்த வழிப்போக்கன்
ஒருவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது..

அது வைரம் என்றறியாமல்,

விலை போகுமா என்ற

சந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான்..


அவன் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த வியாபாரி ஒருவன்,
இருபது ரூபாய்க்கு தன்னிடம் அதை விற்குமாறு கேட்டான்..

ஆனால் வழிபோக்கனோ பேரம் பேசித்தான் பார்ப்போமே என்ற
எண்ணத்துடன் 25 ரூபாய் கேட்டான்..


ஐந்து ரூபாய் அதிகம்
கொடுக்க விரும்பாத அந்த வியாபாரியும் 20 ரூபாய்க்கு பேரம் பேசினான்..


இதைக் கவனித்த
மற்றொரு வியாபாரி 25 ரூபாய் கொடுத்து அந்த வைரைத்தை வாங்கிக்கொண்டு சென்றான்..

ஆத்திரமடைந்த வியாபாரி,
அந்த வழிப்போக்கனை பார்த்து, “அட முட்டாளே! அதன் மதிப்பு பல ஆயிரம் பெறும்... அறிவில்லாமல்

விற்றுவிட்டாயே!” என்று திட்டினான்..

அதற்கு அவன், “அந்தக் கல்லுக்கு என்னுடைய
மதிப்பு அவ்வளவுதான்..
ஆனால் அது வைரம், அதன் மதிப்பு தெரிந்தும் அதைத் தவறவிட்ட நீ தான் மிகப்பெரிய முட்டாள்” என்றான்..

சிலர் இப்படித்தான் உண்மையான மதிப்பு தெரிந்தும், கிடைத்ததை விட்டுவிட்டுத் தவிக்கிறார்கள்.

Saturday, September 6, 2014

உலகம் எப்ப சார் அழியும்?

பக்கத்து வீட்டுக்காரம்மா என்கிட்ட சொன்னாங்க,
"என் வீட்டுக்காரருக்கு நாந்தான் சார் உலகம் ...

நான் இல்லாம அவரால வாழவே முடியாது"
அப்போதான் எனக்கு உரைக்க ஆரம்பிச்சது...

அந்த அம்மாவோட வீட்டுக்காரர் என்கிட்ட வந்து,

"உலகம் எப்ப சார் அழியும்?"னு ஏன் அடிக்கடி கேட்டாருன்னு.

Friday, September 5, 2014

தத்துவம்

1. ஒரு லிட்டர் பால் கொட்டி விட்டால் அதில் 80 சதவீதம் தண்ணீர்தானே என்று மனதை தேத்திக்கொள்ளும் மனநிலைக்கு பேர்தான் தத்துவம்.

2. சந்தேகம் என்று வந்துவிட்டால் பல்லி கூட டயனோஸராக தோன்றும்.


3. வெளியே போனவள் இன்னும் வீடு திரும்பவில்லையே!
: இது பெற்றோர் கவலை
வீட்டிற்குள் போனவள் இன்னும் வெளியே வரவில்லையே!
: இது காதலனின் கவலை

4. பெண்கள் எதையும் அவ்வுளவு சீக்கிரம் நம்ப மாட்டார்கள், ஆனால் பெண்கள் அழகு என்று சொன்னால் மட்டும் உடனே நம்புகிறார்கள். . .

5.வெறும் அழகினால் ஆணின் உண்மையான
அன்பைப் பெற்றுவிடலாம் என நினைக்கும் பெண் ,
முட்டாள்.

6 அழகான பெண்ணிடம் அடக்கம் இல்லை ! அடக்கமான பெண்ணிடம் அழகில்லை ! இரண்டும் இருக்கும் பெண்ணை பார்த்ததில்லை !

7. காதல் ஒரு கைக்குட்டை போல சிலர் முகம் துடைக்கின்றன
பலர் கை துடைக்கின்றனர்,ஒருசிலர் மடித்து கடைசிவரை
ஒளித்தேவைத்துவிடுகின்றனர்

8. walking ,கூட்டிட்டு போகாத நாய்க்கும்
shopping ,கூட்டிட்டு போகாத பொண்டாட்டிக்கும் ,
கண்டிப்பா ஒரு நாள் .வெறி பிடிக்கும் ,
.கஷ்டத்த பாக்காம கூட்டிட்டு போங்க

9.மனைவியுடனான சண்டையில் தோற்றுவிடுங்கள்,அதுதான் உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான குறுக்கு வழி!!

10. எதை எல்லாம் நடக்கக்கூடாது
என்று எண்ணுகிறாயோ...அதெல்லாம் நடப்பது தான்
வாழ்க்கை!

Thursday, September 4, 2014

நம் உடம்பிலே மிக முக்கியமான உறுப்பு

" 'நம் உடம்பிலே மிக முக்கியமான உறுப்பு' என்ற தலைப்பில் ஆசிரியர் தன் மாணவர்களை ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். அந்த வகுப்பில் உடல் ஊனமுற்ற ஒரு சிறுமியும் இருந்தாள்.

கட்டுரைக்கான தலைப்பே அவளுக்கு பிடிக்கவில்லை. தவிர, சக மாணவர்கள் அந்தச் சிறுமியின் ஊனத்தைச் சொல்லி கிண்டல் செய்ய..

அன்றைய வகுப்பு பாவம் அவளுக்கு நரகமாகக் கழிந்தது.

மாலை வீடு திரும்பியதும் அந்தச் சிறுமி தன் அம்மாவின் தோள்களில் சாய்ந்து அழுதபடியே கேட்டாள்..

"நம் உடம்பில் முக்கியமான உறுப்பு எதும்மா?"

"உடம்பிலே கண் தான் மா முக்கிய உறுப்பு! ஏன் என்றால், கண் இல்லையெனில் உலகமே இருட்டாகிவிடுமே" என்று சொன்னாள் அம்மா. ஆனால், அதைச் சரியான பதிலாக அந்தச் சிறுமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

"அப்படியானால் கைகள் தான் முக்கியமான உறுப்பு.

அது இல்லையென்றால் நம்மால் எழுதவோ, வேறு எந்த வேலையும்

செய்ய முடியாது இல்லையா" ..

அம்மாவின் இந்த பதிலையும் சிறுமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கடைசியில் அந்தச் சிறுமியே ஒரு பதிலைச் சொன்னாள்.."

நம் உடம்பில் தோள்கள்

தான்மா முக்கியமான உறுப்பு. மற்ற

உறுப்புக்கள் எல்லாம் நமக்கு உதவியாக

இருக்கும். ஆனால், தோள்கள் தான்

ஆதரவு தேடும் அன்பு முகங்கள் புதைந்து கொள்ள இடம் கொடுக்கும்.

இதோ, நான் கூட இப்போது உன் தோள்களிலே முகம் புதைந்து அழுகிறேன்.

என்னைப் பொறுத்தவரை அடுத்தவர் அழுவதற்கு இடம் கொடுக்கும் தோள்கள் தான் உடம்பிலே முக்கியமான உறுப்பு!"

Wednesday, September 3, 2014

என்னம்மா இப்படிப் பண்ணிட்டீங்க…?

இங்கிலீஷ் பேப்பர் கிலோ ஒன்பது ரூபாய்
தமிழ் பேப்பர் நாலு ரூபாய்’ என்பதைப் பார்த்ததும்
தனது குறுகிய புத்தியை செயலாற்றத் துவங்கினாள் சாந்தி

இங்கிலீஷ் பேப்பபரின் இடை இடையே தமிழ் பேப்பரை
வைத்துக்கட்டி பேப்பர்காரனுக்குப் போட்டாள்
எல்லாம் இங்கிலீஷ் பேப்பர்பா, பார்த்து நல்லா எடை போட்டு எடுத்திட்டுப் போப்பா…!

சரிங்கம்மா, மொத்தம் பத்து கிலோகிட்ட வருது,…இந்தாங்கம்மா
தொண்ணூறு ரூபாய் என அவன் கொடுத்து சென்றான் ஏதோ …சாமர்த்தியமாய் சாதித்ததாய் பூரித்துப் போனாள்

சாந்தி!

மாலை அதே பேப்பர்காரனைப் பார்த்ததும் கொஞ்சம் வெல வெலத்துப்போனாள்…

என்னம்மா இப்படிப் பண்ணிட்டீங்க…?

பேப்பருக்கு இடையில…!
அவன் பேப் பேச சாந்திக்கு வியர்த்தது!

‘இந்த அஞ்சு பவுன் செயின் இருந்தது, பவுன் விற்கிற
விலைக்கு, இப்படியா அலட்சியமா இருக்கிறது|?
இந்தாங்கம்மா…! 

என எடுத்து நீட்ட….

அவன் தங்கமாகவும் தான் கிழிந்த பழைய பேப்பருமாக

மாறி இருந்ததை சாந்தியால் உணர முடிந்தது!!

Tuesday, September 2, 2014

பெருசா ஒன்னும் இல்லீங்க

என்னடா முனியா நான் ஊர்ல இல்லாதப்ப ஏதும் விசேஷம் உண்டா…?

பெருசா ஒன்னும் இல்லீங்க நம்ம நாய் செத்துப்போச்சு.­..

அடக்கடவுளே எப்படிடா திடீர்ன்னுசெத்துச்சு…?

கெட்டுப்போன மாட்டுக்கறியை தின்னுடுச்சுங்க­….

மாட்டுக்கறி எங்கடா கிடைச்சது அதுக்கு…?

நம்ம வீட்ல தாங்க…

நாம தான் மாட்டுக்கறி திங்கிறதில்லையே ­…!!?

நெருப்புல அவிஞ்சி போன மாடு மூணு நாலா கிடந்து

கெட்டுப்போச்சுங்க. அதைத்தான் நாய் தின்னிடுச்சு…­.

நம்ம மாடா…?

ஆமாங்க…


அய்யய்யோ….!! எப்படிடா எரிஞ்சி போச்சு..!?

நம்ம வீடு எறியும் பொது நெருப்பு பறந்து மாட்டுக்கொட்டகை யில் விழுந்துரிச்சு. ­…

வீடு எப்படிடா எரிஞ்சது….?

குத்து விளக்கு விழுந்து தீ பரவிடிச்சுங்க..­..

குத்து விளக்கு ஏத்துற பழக்கமே நம்ம வீட்டுல கிடையாதேடா…!

அதுக்காக… செத்தவங்க தலைக்கு விளக்கு வைய்க்காம இருக்க முடியுமா…?

யார்ரா செத்தது…?

உங்க அம்மா…

எப்படிடா செத்தாங்க…?

தூக்கு போட்டுக்கிட்டு. ­..

ஏன்டா…?

அவமானத்தில்தான் ­…

என்னடா அவமானம்…?

வீட்டுல இருக்குற பொண்ணு ஒருத்தன் கூட

ஓடிப்போனா ஊரு காறித்துப்பாதா.­..?

ஓடிப்போனது யாருடா…?

உங்க பொண்டாட்டிதான்.­.

Monday, September 1, 2014

எதற்கும் கவலை கொள்ளாதே..!

ஒரு ஊரில் பல ஆண்டுகளாக வயல்களில் ஒரு வயது முதிர்ந்த விவசாயி வேலை செய்து கொண்டிருந்தார். அவர் தனது வீட்டில் ஒரு குதிரையை வளர்த்து வந்தார். ஒரு நாள் அந்த குதிரை எங்கேயோ ஓடி போய்விட்டது. அந்த விஷயத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரிடம் சென்று, "என்ன ஒரு கெட்ட அதிர்ஷ்டம்!" என்று கனிவோடு பேசினர். அதற்கு அந்த விவசாயி "இருக்கலாம்" என்று சொன்னார்.

மறுநாள் காலையில் ஓடிப் போன அந்த குதிரை திரும்ப வந்துவிட்டது. ஆனால் வரும் போது மூன்று குதிரைகளோடு வந்தது. அதை அறிந்தவர்கள், அவரிடம் "எவ்வளவு அற்புதம்" என்று ஆச்சரியத்தோடு வந்து பேசினர். அதற்கும் அவர் "இருக்கலாம்" என்று கூறினார்.

அடுத்த நாள் அந்த விவசாயி மகன் அந்த குதிரையின் மீது சவாரி செய்ய ஆசைப்பட்டு, குதிரையின் மீது ஏறினான். ஆனால் அந்த குதிரையோ அவனை கீழே தள்ளிவிட்டது. அதனால் அவனது கால் உடைந்துவிட்டது. உடனே பக்கத்து வீட்டுக்காரர்கள், அவரிடம் மறுபடியும் கனிவோடு பேசினர். அதற்கும் அவர் "இருக்கலாம்" என்று சொன்னார்.

மறுநாள் இராணுவ அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு இளைஞர்களை அழைத்து செல்ல வந்தனர். அப்போது கால் உடைந்த அந்த இளைஞனை பார்த்து, சென்றுவிட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் அந்த அவரிடம் வந்து "என்ன பாக்கியம் செய்தீர்களோ உங்கள் மகனை விட்டு சென்றுவிட்டனர்" என்று கூறி வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதற்கும் அந்த விவசாயி "இருக்கலாம்" என்றே கூறினார்.

ஆகவே "எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும். எனவே எதற்கும் கவலை கொள்ளாமல் எல்லாம் நன்மைக்கே என்று ஏற்று கொள்ள வேண்டும்" என்பது நன்கு இக்கதையின் மூலம் புரிகிறது..