Tuesday, September 16, 2014

ஒருவனில் ஆயிரம் !

சிலர், செல்ல மகள் வாழ வேண்டும் என்பதற்காக கோடி கோடியாகச் சேர்ப்பார்கள். ஆனால், அவள் யாரோ ஏழையைக் காதலித்து மணந்தாள் என்பதற்காக சல்லிக்காசு தராமல் துரத்தியடிப்பார்கள்.

அவள் கஷ்டப்படுகிறாள் என்று யாராவது சொன்னால், ''படட்டும்... போய் பிச்சை எடுக்கட்டும்'' என்று சபிப்பார்கள்.


மகளை காலடி தரையில் படாமல் வளர்க்க நினைப்பது ஓர் எண்ணம். தெருத் தெருவாகப் பிச்சைக்கு அனுப்புவது முற்றிலும் நேர்மாறான ஓர் எண்ணம். இரண்டுமே ஒரு தகப்பனுக்குள் எப்படி இருக்க முடியும்? இருக்கிறதே! இது புதிர் அல்லவா!

இந்தப் புதிரை ஓஷோ விடுவிக்கிறார்.

''நாம் ஒரு மனிதர் இல்லை. ஆயிரக்கணக்கான மனிதர்கள் நமக்குள் இருக்கிறார்கள். நமக்கும் ஆயிரம் பேர் இருக்க வேண்டும். நாமும் அநேகம்... அனந்தம்...

நமக்குள் இருக்கும் முதல் நபர் காக்க நினைக்கிறார். இரண்டாமவர் அழிக்க நினைக்கிறார். ஒருவர் காதல் செய்யும் போதே மற்றவர் கொலை செய்ய விரும்புகிறார். நம்முள் ஒருவர் பக்தியுடன் கோயிலுக்குள் நுழையும்போதே, இன்னொருவர்... 'இதெல்லாம் பொய். கடவுள் என்று எவரும் இருக்க முடியாது' என்று முணுமுணுக்கிறார். நம்மில் ஒரு பகுதி கோயில் மணி அடிக்கிறது. மறுபகுதி... 'ம்... இது வெறும் பைத்தியக்காரத்தனம்' என்று கூச்சப்படுகிறது. ஒரு பகுதி, ஜப மாலையை உருட்டிக் கொண்டே விஸ்தாரமாகக் கடை நடத்துகிறது!''

- ஓஷோவின் இந்தப் படப்பிடிப்பு, எத்தனை உண்மையானது.

கவனம் சிதறிய மனம் உடையவர்களாக நாம் இருப்பதால்தான் துன்பம் அடைகிறோம்; உலகையும் துன்புறச் செய்கிறோம்.

நம்மில் எதிரெதிராகப் போராடிக் கொண்டிருக்கும் ஆயிரம் ஆயிரம் பேரையும் ஒருங்கிணைக்க முடிந்தால், நாம்தான் உலகமகா பலசாலி. இந்த ஒருங்கிணைப்பை நிகழ்த்தியவர்களே இந்திய யோகிகள்... புத்தர், மகாவீர், சங்கரர், ரமணர் போன்ற ஞானிகள். ஒருங்கிணைப்பின் மூலம் ஆனந்த கீதம் எழுப்பிய சாதனையாளர்கள் இவர்கள்.!

No comments:

Post a Comment